புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, April 25, 2004

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிப்பு

தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் விடுவிக்கப்பட்ட கைதடி, நாவற்குழி, மறவன்புலோ ஆகிய பகுதிகளில் மக்கள் மீளச்சென்று குடியேறுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட போதும் அப்பகுதி வீடுகளை துப்பரவு செய்யவோ, அல்லது பற்றைக்காடுகளை அழிக்கவோ அல்லது தீயிடவோ படையினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களை அடுத்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்களில் இப்பகுதியில் 100 குடும்பங்களையே படைதரப்பு மீளக்குடியேற அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், தென்மராட்சி தெற்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் மையப்பகுதியான தளங்கிளப்பில் இடம்பெயர்ந்த 12 குடும்பங்களையும் இதுவரை படையினர் மீளக்குடியேற அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பகுதிகள் படிப்படியாக படையினரால் மீள கையளிக்கப்படும் என படைத்தரப்பால் கூறப்படுகின்ற போதிலும் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு படைத்தரப்பு பின்னடிப்பதால் மக்கள் அங்கு சென்று குடியேறுவதற்கு வழிசமைக்குமா என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004
தமிழ்நாட்டில் திருமணம் செய்த 50 ஜோடிகளுக்கு வவுனியாவில் பதிவுத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நாடு அகதி முகாமில் தங்கியிருந்த போது திருமணம் செய்துகொண்ட 50 ஜோடிகளுக்கு வவுனியாவில் இன்று பதிவுத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தரானிகராலய வவுனியாக் கிளை அலுவலகத்தின் ஏற்பாட்டில் தமிழ் மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் இவர்களுக்குரிய பதிவுத்திருமணம் சட்டபூர்வமாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பதிவாளர் திருமதி எஸ்.இராசரத்தினம் திருமணப் பதிவுகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் யு.என்.எச்.சி.ஆர். சிரேஷ்ட உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தமிழ்நாட்டில் பிறந்து நாடு திரும்பியுள்ள குழந்தைகளுக்கான பிறப்பு அத்தாட்சிப் பதிவுகளும், இங்கு நடத்தப்பட்டன.

நாடு திரும்பிய அகதிகளுடைய நலன் கருதி இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி விஐலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
24.4.2004
சாவகச்சேரி நகரப்பகுதியில் முஸ்லிம்கள் மீளக்குடியமர முடியாத நிலை

சாவகச்சேரி நகரப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களது குடியிருப்புக்களிலிருந்து படையினர் வெளியேற மறுத்துவருவதால் மீளக்குடியமர வந்திருந்த முஸ்லிம் குடும்பங்கள் தொடர்ந்து அகதி வாழ்க்கையினை வாழவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் மீளக்குடியமர வந்த குடும்பங்கள் தற்போது சாவகச்சேரி ஐ_ம்மா பள்ளிவாசலில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியிலிருந்து மீளக்குடியமர வந்த ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களை அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்ப படைத்தரப்பு அனுமதித்திருக்கவில்லை என தென்மராட்சி பிரதேச செயலர் யாழ். படைத்தலைமைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டின் இறுதியில் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் படிப்படியாகத் தற்போது மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக யாழ் நகரை அண்டியுள்ள முஸ்லிம் பகுதிகளிலும் இந்தக் குடும்பங்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றன. இவ்வாறு சாவகச்சேரி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் பகுதியில் வசித்துவந்த இந்த முஸ்லிம் குடும்பங்களே தற்போது மீளக்குடியமரும் நோக்கில் சாவகச்சேரி திரும்பியுள்ளனர்.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004
77 நலன்புரி நிலையங்களில் 10,938 பேர் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்

யாழ். குடாநாட்டில் உள்ள 77 நலன்புரி நிலையங்களில் 10,938 பேர் அகதிகளாக வாழ்வதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டில் நல்லூர் பிரதேசத்தில் மூன்று நலன்புரி நிலையங்களும், சண்டிலிப்பாயில் 15 நலன்புரி நிலையங்களும், சங்கானையில் 17 நலன்புரி நிலையங்களும், உடுவிலில் 11 நலன்புரி நிலையங்களும், தெல்லிப்பipயில் 5 நலன்புரி நிலையங்களும், கரவெட்டியில் 1 நலன்புரி நிலையமும், பருத்தித்துறையில் 15 நலன்புரி நிலையங்களும், மருதங்கேணியில் 6 நலன்புரி நிலையங்;களும் உள்ளன.

இவற்றில் நல்லு}ரில் 25 குடும்பங்களும், சண்டிலிப்பாயில் 291 குடும்பங்களும், சங்கானையில் 483 குடும்பங்களும், உடுவிலில் 380 குடும்பங்களும், கோப்பாயில் 198 குடும்பங்கம், கரவெட்டியில் 17 குடும்பங்களும், மருதங்கேணியில் 142 குடம்பங்களும் அப்பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் பாதுகாப்பு வலயத்தின் காரணமாக 2370 குடும்பங்களைச் சேர்ந்த 9289 பேர் அகதிகளாக நலன்புரி நிலையங்களில் வாழ்வதாக அப்புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழிலிருந்து எழின்மதி
24.4.2004