புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, May 25, 2004

ஒட்டுசுட்டான் மத்திய மருந்தகம் இயங்குவது எப்போது?

ஒட்டுசுட்டான் மக்களின் வைத்திய சேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய ஒட்டுசுட்டான் மத்திய மருந்தகம் ஒட்டுசுட்டானில் இயங்காது உள்ளமையினால் பெரும் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுகின்றது.

1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய மருந்தகம் மக்கள் மத்தியில் உள்ள நோய்களை நீக்குவதற்கான முதற்படியாக இருந்து வந்தது 1975 ஆம் ஆண்டு பிற்காலப்பகுதியில் கர்ப்பிணிமார்களின் கிளினிக், குழந்தைகளுக்கான கிளினிக் என்பன ஆரம்பிக்கப்பட்டன.

இவ் மத்திய மருந்தகத்திற்கு கூழாமுறிப்பிலிருந்தும் 7 கிலோ மீற்றர் தொலைவிலிருந்தும்; கற்சிலைமடு முத்துஐயன் கட்டு வலதுகரை, இடதுகரை சம்மளக்குளம் பேராறு 9 ஆம் கட்டை ஆகிய இடங்களிலிருந்து நீண்ட தொலைவிலிருந்தும் வந்து மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

அக்காலப்பகுதியில் சகல இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் இருந்தமையினால் ஏனைய நோய் பிரசவம், ஆகியவற்றுக்கு முல்லைத்தீவு வைத்தியசாலையினை மக்கள் நாடினர். காலப்போக்கில் யுத்தத்தின் கொடூரத்தினாலும் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக குறைந்து சென்றமையினாhல் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய மருந்தகத்தை அதிகளவில் நாடினர் 1997 ஆம் ஆண்டு ஜயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் காரணமாக முத்துஐயன்கட்டு இடதுகரையில் இது இடம்பெயர்ந்து இயங்கத் தொடங்கியது.

பின்னர் 1998 ஆம் ஆண்டு ரிவிபல இராணுவ நடவடிக்கையின் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசம் முழுவதும் இடம் பெயர்ந்தவேளை இது றெட்பானாவில் செயற்ப்படத் தொடங்கி இன்றுவரை இயங்குகிறது.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மத்தியமருந்தகம் மீளத் திருத்துவதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் ஒப்பந்தக்காரர்கள் இதனை முன்வந்து செய்வதாக இல்லை.

அதன் செயற்பாட்டை முழுமையாகச் செய்ய முடியாது ஏனவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இவ்வளாகத்தை மக்கள் உலக உணவுத்திட்டத்தின் கீழ் சிரமதானப் பணிமூலம் ஓரளவு சீர் செய்தனர். ஆனால் தற்போது மீண்டும் இவ்வளாகம் பெரும் பற்றைக்காடுகளாகவே காட்சியளிக்கிறது. இதேவேளை இப்பிரதேசத்திற்கென மகப்பேற்று நிலையம் இல்லாததால் கர்ப்பிணித்தாய்மார் பெரும் துன்பங்களை அடைகின்றனர் ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புக்கு செல்வதாயின் 12 மைல் சீரற்ற பாதையினு}டாக செல்ல வேண்டியுள்ளது .

அதேபோல் முள்ளியவளை செல்வதானாலும் 12 மைல் து}ரம் செல்ல வேண்டும். இப்பிரதேசத்தில் வறுமைக்கு உட்ப்பட்ட விவசாயக் குடும்பங்கள் உள்ளதால் நீண்ட து}ரம் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே இப்பிரதேசத்திற்கு மகப்பேற்று நிலையம் கட்டாய தேவையாய் உள்ளது. ஆகையால் இதனையும் சம்மந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுக்க மாட்டார்களா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருந்தபோதிலும் இப்பிரதேசத்தில் திலீபன் மருத்துவமனையினரின் சேவையினாலும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினாலும் ஓரளவு மக்கள் மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து கிருபா
25.5.2004
நன்றி: ஈழநாதம்