புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, August 07, 2003

யுத்தத்தினால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயாந்ததாக ஐக்கியநாடுகள் அமைப்பு கூறுகிறது

யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரில் மூன்று லட்சத்து 11ஆயிரத்து 202 பேர் தமது சொந்த இடங்களில் அல்லது வேறு இடங்களில் குடியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறுகின்றது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையே இதற்கு காரணம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் வெடித்த பின்னர் கடந்த வருடம் வரை குறைந்தபட்சம் ஆறு லட்சத்து 13 ஆயிரத்து 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க இடைத்தங்கல் முகாம்கள்
(இலங்கை நிருபர் ஏகலைவன் - வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2003, 7:25 ஈழம்)

விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் புனர்வாழ்வளித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் உட்பட பத்துத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளதென யுனிசெப் கூறுகின்றது.

இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு விடுதலைப் புலிகள் சிறுவர்களை தமது இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என உறுதியளிக்க வேண்டும் என்றும் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி டெற் சைபான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் யுனிசெப் உதவியுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் நிர்மானிக்கப்படவுள்ள இடைத்தங்கல் முகாமிற்கான அடிக்கல்லை நேற்று நாட்டி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏற்கனவே கிளிநொச்சி, திருகோணமலை மாவட்டங்களில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி கூறினார்.

இதேவேளை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை புலிகள் அமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனமாக சிலர் கருதுகின்ற போதிலும் அதில் எதுவித உண்மையும் இல்லை என அந்த கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், தமது கழகம் மேற்கொண்டு வரும் சிறுவர் திட்டங்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்களுக்கு, உதவும் முகமாக யுனிசெப் மேற்கொண்டுவரும் இத்தகைய திட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.

நன்றி - புதினம்.கொம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இடைத்தங்கல் முகாம் ஒன்றை ஆயித்திய மலையில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று யுனிசெப் உதவியுடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் ஆயித்திய மலையில் நடாத்தப் பட்டது. அதன் போது தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.கே.பி.றெஜி அவர்கள் மங்களவிளக்கை ஏற்றி வைக்க மட்டு. திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருள் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அவர்கள் அடிக்கல்லை நாட்டினார். புலிகளின் சிறப்புத்தளபதி திரு. ரமேஸ் அவர்கள் உரையாற்றினார்.
புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.றெஜி அவர்கள் மங்களவிளக்கேற்றுவதையும், மட்டு. திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருள் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அவர்கள் அடிக்கல் நாட்டுவதையும் புலிகளின் சிறப்புத்தளபதி ரமேஸ் அவர்கள் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.