புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, May 13, 2004

சிறுவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை: வவுனியா மாவட்ட கொள்கை முன்னெடுப்பு பொறுப்பாளர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணையும் சிறுவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று அமைப்புக்கள் தெரிவிக்கின்றனரே தவிர விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியான விடயமாக இருப்பதாக வவுனியா மாவட்ட கொள்கை முன்னெடுப்புப் பிரிவு பொறுப்பாளர் சிறீநாத் தெரிவித்தார்.

இயக்கத்தில் இணைய வந்த சிறுவன் ஒருவரை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு யுனிசெப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்த பின்னர் இதனை தெரிவித்தார். இயக்கத்தில் இணையும் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அண்மை நாட்களாக தமக்கு 18 பேர் தொடர்பான முறைப்பாடுகள் வவுனியாவில் கிடைத்து இருப்பதாகவும், அவர்களும் வயதில் குறைந்தவர்களாக இருந்தால் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 1500 பேர் வரையிலானோர் சம்பந்தமாக தமது அமைப்பிடம் முறைப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பணிப்பிற்கிணங்க நாளுக்கு நாள் போராட்டத்தில் இணைய வரும் சிறுவர்களை விடுதலை செய்து வருகின்றாம்.

சிறுவர்கள் தமது கஷ்டத்தின் நிமிர்த்தமே இயக்கத்தில் இணைந்து நன்றாக வாழலாம் என்று கருதி வருகின்றனர். நாங்கள் இயக்கத்தில் இணைத்து வருகிற சிறுவர்களை தொடர்ச்சியாக விடுதலை செய்து வருகின்றோம்.

விடுதலை செய்யப்படும் சிறுவர்களை பராமரித்து அவர்களின் கல்வி நிலை வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் வேறு வழியில் செல்லாமல் தடுக்க முடியுமென்று சிறீநாத் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வேப்பங்குளம் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் கிளை செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியாவிலிருந்து மகாமுனி
13.5.2004
யுத்தத்தின் முலம் மக்களின் உணர்வுகள் மட்டுமல்ல அழிக்கப்பட்ட வரலாறுகளுமே எமக்கு சிறிலங்கா அரசு கொடுத்த பரிசு: சோ.தங்கன்

20 வருட காலத்திற்கு மேற்பட்ட யுத்த காலத்தில் எங்களுடைய மக்களின் உணர்வுகள் மட்டுமல்ல, மக்கள் வாழ்ந்த பிரதேசங்களையும் அவர்களுடைய சொத்துக்களும், உடமைகளும் அழிக்கப்பட்ட வரலாறுகளே எமது மக்களுக்கு சிறிலங்கா அரசு கொடுத்த பரிசாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் நோயாளர் விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகiயில், நீண்டதொரு துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்தே துயரத்தோடு வாழ்ந்த எமது மக்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களை அனுபவித்து வந்தனர்.

இந்த யுத்தம் எங்களுடைய தேசத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. அதற்கு ஆதாரமாக கிளிநொச்சி வைத்தியசாலை ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. இந்த வைத்தியசாலையில் எமது மக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்த சம்பவம் இந்த வைத்தியசாலைக்கு ஏற்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா பிரதி மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

பொதுச்சுடரினை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நோயாளர் விடுதியினை இலங்கைக்கான ஜப்பானிய து}துவர் அக்கியோசூடா அவர்களும், மகப்பேற்று விடுதியினை அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவர்களும் திறந்து வைத்தனர்.

வன்னியிலிருந்து கிருபா
12.5.2004
கிளிநொச்சி வைத்தியசாலை கட்டிடத் தொகுதி திறப்பு

ஜப்பானின் நிதியுதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அமைக்கப்ட்டுள்ள மகப்பேற்று, சாதாரண விடுதிகள் உள்ளடக்கிய கட்டிடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்பு விழாவில் சிறிலங்காவிற்கான ஜப்பானின் தூதுவர் திரு.அக்கியோசூடா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சு அத்தியட்சகர்கள், மகாணசபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வன்னியிலிருந்து கிருபா
12.5.2004
கடற்றொழில் துறையை மேம்படுத்த முல்லையில் யு.என்.டி.பி. உதவி

முல்லை மாவட்டத்தில் யு.என்.டி.பி. நிறுவனம் 2003 ஆம் ஆண்டு திட்டத்தில் சுமார் 26 மில்லியன் ரூபா கடற்றொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது சுமார் 12 மில்லியன் ரூபா பெறுமதியான கடல் தொழில் உபகரணங்களும் 14 மில்லியன் ரூபா முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் வழங்கப்பட்டது.

அதில் மீன், இறால் குளிரூட்டப்பட்டு பாதுகாப்பாக ஏற்றுமதி செய்யப்பயன்படும் மூன்று வாகனங்கள் ஒரு பாரஊர்தி 9 மோட்டார் சைக்கிள்கள் 3 போட்டோ பிரதி இயந்திரங்கள் 3 கணினிகள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் கடற்றொளிலாளர்களை மேம்படுத்துவதற்கு இந்நிறுவனம் உதவி வளங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஜ வன்னியிலிருந்து கிருபா
12.5.2004
நன்றி: ஈழநாதம்