புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, May 17, 2004

ஆழியவளையில் தியாக தீபம் திலீபன் மருத்துவனை புதிய கட்டிடத் திறப்பு விழா

இராணுவக் கட்டுப்பாடற்ற வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபன் மருத்துவமனையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும், இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

வடமாராட்சி இராணுவக் கட்டுப்பாடற்ற மக்களின் சுகாதார வைத்திய தேவைகளின் மகத்துவத்தை உணர்ந்து தியாகி திலீபனின் மருத்துவ சேவையினர் புதிய கட்டிடம் ஒன்றையும், நிறைவான தேவைகளையும் வழங்க முன்வந்துள்ளனர்.

அரசாங்க வைத்திய சேவைகளற்ற இந்த பிரதேசத்தில் திலீபன் மருத்துவமனை மீளக்குடியேறியிருக்கின்ற மக்களின் வைத்திய வசதிகளை இலவசமாக எந்த நேரமும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து எழின்மதி
16.5.2004
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மருத்துவ உபகரணத் தொகுதியொன்றினை வவுனியா அரச அலுவலகத்தில் வழங்கியுள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களுக்குமான மருத்துவ உபகரணத் தொகுதியொன்று வவுனியா அரச அலுவலகத்தில் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

ஒபரேசன் யு.எஸ்.ஏ. என்ற நிறுவனத்தினால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக வழங்கப்பட்டுள்ள இந்த மருத்துவ உபகரணங்களின் பெறுமதி 11 மில்லியன் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மாவட்ட சுகாதார அதிகாரிகளும், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து அங்கு கொண்டு செல்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினர் ஆறு இலட்சம் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

16.5.2004
nantri-Puthinam.com

நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 50 பேர் வருகை

இராணுவ நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் இந்தியாவின் திருச்சி மாவட்ட நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 50 தமிழர்கள் நேற்று முன்தினம் மன்னார் பகுதிக்கு வந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கிளம்பிய இவர்களை இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் மணல் திட்டி எனும் பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும், பேசாலை மீனவர்கள் இவர்களை கரைக்கு கொண்டு வந்ததாகவும் அப்பொழுது பொலிசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களை நீதவான் சொந்த இடங்களுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டுள்ளார். இவர்கள் மன்னார் பேசாலை, தலைமன்னார், தோப்பூர், வவுனியா செட்டிக்குளம், யாழ். இளவாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து மகாமுனி
15.5.2004
nantri-Puthinam.com