புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, August 27, 2003

புலம் பெயர்ந்து சென்ற தமிழ்மக்கள் தாயக அபிவிருத்திக்கு உதவவில்லை!
யாழ்.மாவட்ட அரச அதிபர் கவலை


கடந்தகால யுத்த அனர்த்தங்களால் சின்னாபின்னப் பட்டிருக்கும் வடக்குக் கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ்சமூகம் போதி யளவு உதவவில்லை.- இவ்வாறு கவலை தெரிவித்தார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செ.பத்மநாதன்.

பிரிட்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ். மாவட்டக்கிளை வலுவிழந்தவர்களுக்கு சக்கரநாற்காலிகளை வழங்கும் நிகழ்வு நேற்று நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தனது கவலையை வெளியிட்டார்.

தமிழர் புனர்வாழ்வு யாழ்ப்பாணக் கிளை பொறுப்பாளர் எஸ்.ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிபர் பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது:-வெளிநாடுகளைப் பொறுத்தவரை உள்நாட்டில் கிடைக்கும் வருமானத்தை விட பிற நாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானமே அந்த நாட்டின் அபிவிருத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியினை கொடிய யுத்தத்துக்கு செலவீடு செய்வதிலும் பார்க்க நன்கு திட்டமிட்ட முறையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்துவதே கூடிய பயன்பாடு உடையதாக அமையும்.

இங்கு இடம்பெற்ற போராட்ட சூழலினால் இளம் தலைமுறையினர் பலர் அங்கவீனர்களாகி வலுவிழந்து எத்தகைய உதவிகளும் இன்றி நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இத்தகையோருக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு முன் வந்த சைவக் கோயில்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எம்மக்களின் பெரும் பகுதியினர் போராட்டத்துடன் இணைந்தும் பங்கு பற்றியும் தமது வாழ்க்கையை வேறு பக்கம் திருப்பியுள்ளார்கள். ஒரு பகுதியினர் இம்மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வேறு ஒரு வகையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள. அதேபோல இந்த மண்ணில் இருந்து கொண்டே இடம்பெயர்ந்து பல்வேறு துன்ப துயரங்களை மேலும் பலர் அனுபவிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவிகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இவர்களின் தேவையறிந்து தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறது. அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை விடுதலைப் புலிகளின் அமைப்பு என்று தொடர்புபடுத்தி அதனுடன் இணைந்து பணியாற்றிய அரச அலுவலர்களையும் கடந்த காலங்களில் வேலையிலிருந்து நீக்கியிருந்தது. ஆனால், இன்று அந்தநிலை முழுமையாக மாறியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சர்வ தேச அமைப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு அந்த அமைப்புடன் அரசு கலந்துரையாடல்களையும் மேற்கொள்கின்றது.
இந்த அமைப்பு போரினால் துன்பப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்தோர் தமிழ்சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் போரினால் சிதை வடைந்துள்ள வடக்கு - கிழக்குப்
பகுதியை அபிவிருத்தி செய்யலாம் - என்றார்.

இந்நிகழ்வில் யாழ். நல்லூர் கோட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் ஈஸ்வரன், நல்லை குருமகா சந்நிதானம் சிறீலசிறீ சோமசுந்தர பரமாச்சாரிய ஞான சம்பந்த தேசிகர், சங்கானைப் பிரதேச செயலர் லயன் கலாநிதி கே.குணராசா, யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவ னங்களின் ஒன்றியத் தலைவர் வி.தியாகராசா கியூடெக் பணி இயக்குநர் வண பிதா ஜெயக்குமார் அடிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இறுதியில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் தெரிவு செய்யப்பட்ட 15 வலுவிழந்தோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. . .

நன்றி - உதயன் 27.8.2003