புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, April 28, 2004

திருக்கேதீஸ்வரத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் 50 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் 50 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.

தலா 20 பேர்ச் கொண்ட இந்த காணித்துண்டுகளை 50 பேருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

யுத்த காலத்தின் போது திருக்கேதீஸ்வர ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 500 பேர்வரை வசித்ததாக பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணித்துண்டுகளுக்காக 150 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 50 பேருக்கே தற்போது காணித்துண்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் பிரதேச செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
26.4.2004
மட்டு. மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள 37 கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்கு இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

முக்கியமாக காக்காச்சிவெட்டை, ஓமடியாவடு பெரிய புல்லுமலை, வெல்லாவெளி, வவுணதீவு ஆகிய பகுதிகளிலேயே கூடுதலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
25.4.2004