புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, February 03, 2005

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 120 வீடுகளைக் கையளிக்கவுள்ளது

ஆழிப்பேரலையால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கல் குடியிருப்புக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்து வருகின்றது. இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 வீடுகள் இன்று கையளிக்கப்படவுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும்äபாரிய சொத்தழிவுகளுக்கும் மத்தியில் பாதிக்கப்பட்டு, பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள் போன்ற நலன்புரி நிலையங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மக்களுக்கு இடைத்தங்கல் குடியிருப்புக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிறுவி வருகின்றது.

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சத்துருக்கொண்டான் எனும் இடத்தில் 120 வீடுகள் அமைக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் 120 குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.

இக்குடியிருப்புகளில் குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இக்குடியிருப்புக்களை அமைப்பதற்கு சுவிட்சர்லாந்து நாட்டினில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் நிதியுதவி வழங்கி கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பட்டை, காரைதீவு, கவுடாப்பட்டி, முனையூர் ஆகிய இடங்களிலும் இடைத்தங்கல் குடியிருப்புகளுக்கான வீடுகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்து வருகின்றது. இக்குடியிருப்புப் பகுதிகளிலும் குடிநீர், சுகாதார, மருத்துவ, மலசலகூட அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கிய வேலைத்திட்டச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நலன்புரி நிலையங்களில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறார்களின் நலன் கருதி தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த முன்பள்ளிகளும், போசாக்கு மையங்களும் மேலும் வளப்படுத்தப்பட்டு இடைத்தங்கல் குடியிருப்புப் பகுதிகளில் நிறுவுவதற்கான வேலைத்திட்டச் செயற்பாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்பள்ளி கல்வி மேம்பாட்டு நிலையம் ஈடுபட்டு வருகின்றது.

வடபகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உண்ணாப்புலவு, கள்ளப்பாடு, செல்வபுரம், வண்ணாங்குளம், சிலாவத்தை, உப்புமாவடி, அளம்பில் வடக்கு, அம்பலவன், பொக்கணை, வட்டுவாகல் மற்றும் விசுவமடு பிரதேசத்தை அண்டிய சுண்டிக்குளம் போன்ற இடங்களலும், யாழ் மாவட்டத்திலுள்ள வடமாராச்சி கிழக்குப் பிரதேசத்திலுள்ள நாகர்கோவில், செம்பியன்பற்று,வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய இடங்களிலும் இடைத்தங்கல் குடியிருப்புக்கான வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வடமராட்சிப் பகுதயில் சுனாமி அனர்த்த புனர்நிர்மாணப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காக பருத்தித்துறைப் பகுதியில் திட்டமிடல் செயலகம் ஒன்று யாழ் மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 300 படகுகளை வழங்கியுள்ளது



வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீளவும் தங்கள் வழமையான வாழ்வுக்குள் திருப்பும் முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 300 படகுகளை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வடமராட்சி ஆகிய மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முற்றாகப் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தொழிலை ஆரம்பிக்கும் வகையில் இந்தப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை "மீளவும் தொழிலுக்குத் திரும்பும் திட்டம்" என்ற திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ள புனர்வாழ்வுக் கழகம், பழுதான படகுகள், வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களைத் திருத்தும் ஆலைகளை உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது.

இத்திட்டத்தின் கீழ் படகுகளைத் திருத்தும் அதேவேளை புதிய படகுகள், கட்டுமரங்களை உருவாக்குவதுடன், புதிய வலைகள், தூண்டில்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை உருவாக்குவதும் அடங்குகின்றன.