புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, February 09, 2004

வடக்கு, கிழக்கில் அவசர மீளமைப்பு பணிகளுக்கு நேரடியாக உதவ அனைத்துலக சமூகம் மிகுந்த ஆவல்

இலங்கையின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமை வடக்கு, கிழக்கின் அவசர புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாதென்பதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், இதனால் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உடனடியாக உதவிகளை வழங்குவது குறித்து தாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் சுவிஸ் அரசு விடுதலைப் புலிகளிடம் உறுதியளித்துள்ளது.

ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள விடுதலைப் புலிகளிடமே செவ்வாய்க்கிழமை சுவிஸ் வெளிவிவகார அமைச்சில் மூத்த அதிகாரிகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர். சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்புகள் குறித்து, சுவிசிலிருந்து ஜேர்மனிக்குப் புறப்பட முன்னர் விமான நிலையத்திலிருந்து புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இந்தத் தகவல்களை கொழும்பு தினக்குரல் செய்தி இதழுக்குத் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், பிரதி வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான கொடற் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அரசியல் பிரிவின் மனிதப் பாதுகாப்பிற்கான மூத்த அதிகாரியான பீற்றர் மியூரர் ஆகியோரைச் சந்தித்து வடக்கு, கிழக்கு நிலைமைகள் குறித்தும், தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்தும் விரிவாக விளக்கமளித்துள்ளோம்.

இலங்கை அரசுடனான இருவருட போர் நிறுத்தத்தின் முழுமையான பெறுபேறுகளை தென்பகுதி மக்கள் முற்றாக அனுபவித்து வரும் நிலையில், வடக்கு, கிழக்குப் பகுதிக்கு அதன் பலாபலன்கள் எதுவுமே கிடைக்காத அதேநேரம், இராணுவ நெருக்கடிகள், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றால் அல்லல்படும் மக்கள் எதுவித புனர்வாழ்வும் இன்றி மிகுந்த துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசுடனான அமைதிப்பேச்சுக்களின் போது இவற்றிற்கெல்லாம் உடனடியாகத் தீர்வு கண்டு விட முடியுமென தமிழ் மக்கள் பெரிதும் நம்பியிருந்தபோதிலும், அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியதால் தற்போது அவர்கள் இந்தச் சமாதான முயற்சிகளில் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். முற்று முழுதாக தமிழ் மக்களின் நம்பிக்கை சமாதான முயற்சிகளிலிருந்து இழக்கப்படுவதற்கு முன்னர் சர்வதேச சமூகம் அவர்களுக்குக் கை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயத் தேவை குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக சுவிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமளித் துள்ளோம். அக்டோபர் 31 ஆம் திகதி இலங்கை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக வரைபானது இவற்றிற்கெல்லாம் ஓரளவாவது தீர்வு கண்டு விடுமென நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் முக்கிய மூன்று அமைச்சுகள் பிரதமரிடமிருந்து பறிபோகவே நிலைமை மோசமாகி இன்று சமாதான நிலையே கேள்விக் குறியாகி விட்டது குறித்தும் நாங்கள் சந்தித்த தலைவர்களிடம் எல்லாம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். தென்பகுதி நிலைமைகளை பார்த்துக் கொண்டிராது வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணும் நோக்கிலேயே சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடி இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளோம்.

இந்த நிலைமையிலாவது, சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு உதவாவிடில், சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் தமிழ் மக்கள் இழந்து விடக்கூடிய அபாய நிலை தோன்றியிருப்பது குறித்தும் நாங்கள் விளக்கிக் கூறிய போது, எமது நிலைப்பாட்டையும், தமிழ் மக்களின் நிலைமையையும் ஐரோப்பிய நாடுகள் தற்போது நன்கறிந்து வருவதாகவும் தாங்கள் அவர்களை கைவிடப் போவதில்லை எனவும் சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்ததுடன், உடனடியாக உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தாங்கள் தயாராகவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளனர்.

ஐரோப்பியாவுக்கான இந்தச் சுற்றுப் பயணம் அவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், வடக்கு, கிழக்கு நிலைமைகள் குறித்து அவர்களால் தற்போது தெளிவான நிலைப்பாடொன்றை எடுக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும், தற்போதைய சந்திப்புக்கள் தொடர்பாக தாங்கள் உடனுக்குடன் வன்னியில் தங்கள் தலைமைப்பீடத்துடன் ஆலோசித்து அங்கிருந்து வரும் அறிவுறுத்தல்கள் மூலம் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

நன்றி - முழக்கம் இணைய சஞ்சிகை