முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல்
திருகோணமலையில் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல்
முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான கருத்துப்பரிமாற்ற ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று திருகோணமலை தமிழர் புனர்வாழ்வுக்கழக மாவட்ட பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 15-02-2005 அன்று 4.00 மணியளவில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்ற கலந்துரையாடலின் போது கடந்த 26.12.2004 அன்று நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக சாவைத்தழுவிய முன்பள்ளிச் சிறார்களையும், முன்பள்ளி ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட முன்பள்ளி கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டச் செயற்பாடுகள், அவற்றின் பயன்பாட்டு விளைவுகள் தொடர்பான மீளாய்வுகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து நிகழும் 2005 ஆம் ஆண்டுக்கான கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டச் செயற்பாடுகள் தெடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு ஆராயப்பட்டன.
ஆக்கபூர்வமாக அமைந்துள்ள இக்கருத்துப்பரிமாற்ற ஒன்றுகூடலில் வடக்குக் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி மேம்பாட்டு நிலையத் தலைவி செல்வி ஜெயா தம்பையா, தமிழர் புனர்வாழ்வுக் கழக ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் திரு. சே. பாண்டியன், திருகோணமலை மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிப்பாளர் திரு. தி. கிருபாகரன், மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் செல்வி. ந. நித்தியபிரபா, சிங்களப் பகுதி முன்பள்ளி இணைப்பாளர் ஆன் சாகரிகா மற்றும் பிரதேச முன்பள்ளி இணைப்பாளர்கள், வலைய முன்பள்ளி இணைப்பாளர்கள், சிங்களப்பகுதி முன்பள்ளி இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் செல்வி ந. நித்தியபிரபா அவர்கள் தலமையில் இடம்பெற்ற இக்கருத்துப்பரிமாற்ற கலந்துரையாடலின் இறுதியில், முன்பள்ளி மாணவர்கள் தொடர்பான போசாக்குப் பிரச்சனைகள் பற்றி திருகோணமலை மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரால் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆக்கபூர்வமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முன்பள்ளிப் பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள் இணைந்த குழுவினர் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிங்களப் பகுதி முன்பள்ளிகள், நலன்புரி முன்பள்ளிகள் மற்றும் ஏனைய முன்பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் சுனாமிப்பேரலையினால் உறவுகளை இழந்த ஆசிரியர்களையும் நேரில் சென்று சந்தித்து தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர்.