புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, December 07, 2003

யாழ். குடாநாட்டில் இயல்புவாழ்க்கை திரும்பும்வரை புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம்.
யாழ். புனர்வாழ்வுக் கிளை அலுவலகம் வெளிநாடுகளிடம் கோரிக்கை

யாழ். குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களை தமிழர் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என யாழ்ப்பாணம் அரச செயலகத்தில் இயங்கும் புனர்வாழ்வுக் கிளை அலுவலகம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலய நடவடிக்கைகளும் இராணுவ நெருக்கு வாரங்களும் பெருந்தடையாகவுள்ளன. இத்தகைய நெருக்கு வாரங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னரும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் இங்கு நிலைமை சுமுகமாக இருப்பதாகவும் அவர்களை இங்கு திருப்பி அனுப்பலாம் எனவும் கூறி வருகின்றனர். ஆயினும் நிலைமை அப்படியல்ல.

எனவே வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமுல் செய்ய வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மாறன்-ஈழம்
06.12.2003

நன்றி: வீரகேசரி
குடாநாட்டில் இயல்பு வாழ்க்கை இன்னமும் ஏற்படவில்லை.
எத்தகைய அபிவிருத்தியும் இல்லை.
அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைப்பு.

நாட்டில் புரிந்துணவு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு இப்போது 21 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் குடாநாட்டில் இன்னமும் இயல்பு வாழ்க்கை ஏற்படவில்லை அதேபோல எத்தகைய அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரான டாக்டர் வீ. தியாகராஜா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

இணையப் பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அன்னா கிளான்ஸி தலைமையிலான அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், சமாதான காலம் ஏற்பட்டதன் பின்னர் குடாநாட்டு நிலைமைகள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டனர்.

தலைவர் டாக்டர் வீ. தியாகராஜா மேலும் குறிப்பிடுகையில்:
புரிந்துணர்வு உடன்படிக்கையானது மக்களின் வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்தத் தவறிவிட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் எத்தகைய அபிவிருத்தித்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிதொகை 25 ஆயிரம் ரூபா இன்னமும் வழங்கி முடிக்கவில்லை.

நாட்டில் சமாதான நிலை ஏற்பட்டதன் பின்னர் துப்பாக்கிகள் மௌனித்துவிட்டன. செல்வீச்சு போன்ற பயப்பிராந்திகள் இல்லாமல் போய்விட்டன. ஆனாலும் மக்களுக்கான பாவனைப் பொருட்கள் அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் மக்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இக்குழுவினர் யாழ். மாவட்ட மேலதிகஅரச அதிபர் திருமதி திலகநாயகம் போல் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் பி. சிவபாதசுந்தரம் ஆகியோரை செயலகத்தில்சந்தித்து அரசாங்கப் பணிகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியா சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்துக்கு மேற்பட்ட செயல்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்மாறன் - ஈழம்
05.12.2003

நன்றி: வீரகேசரி