புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, January 24, 2004

வடகிழக்கு அபிவிருத்தி குறித்து அகாசியுடன் தமிழ்ச்செல்வன் விரிவான பேச்சு

இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று காலை 11:30க்கு கிளிநொச்சியில், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குப் பயணித்த அகாசி, காலை 11:20 மணியளவில் கிளிநொச்சியை சென்றடைந்தார்.

வடக்கு, கிழக்குப் பகுதி மக்களின் நிலை குறித்தும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்ந்தும் தடைப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச சமூகம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அகாஷி, இனிமேலும் இத்தகைய அபிவிருத்திகளைப் பின்போட முடியாது என்றும் இதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திரு.அக்கியோ சூடா, தெற்காசிய வெளிவிவகாரப் பொறுப்பாளர் திரு.ரக்கியோ யமாடா, ஜப்பானிய தூதரக செயலாளர் திரு.கென்ஜி மியாட்டா, தெற்காசிய வெளிவிவகாரப் பிரிவின் செயலாளர் திரு.றியோசூக்கி கமனோ, ஜப்பானிய தூதரகத்தில் பணியாற்றும் திரு.எஸ்.டெவோட்டா ஆகியோர் இப்பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

அபிவிருத்தி திட்டமிடல் செயலகத்தை அமைத்துத் திறந்து வைத்தமைக்காக தமிழ்ச்செல்வனின் தலைமையிலான அரசியல் செயலகத்தைப் பாராட்டிய அகாஷி, சர்வதேச நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளை கிளிநொச்சிக்கு அழைத்து சந்திப்பை நடாத்திய விவேகமான செயற்பாட்டையும் அவர் பாராட்டத் தவறவில்லை.

வடக்கு கிழக்கில் எதுவித புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை குறித்து இப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தியும் வேதனையும் அடைந்துள்ளதை சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்வதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதி கூறினார்.

கொழும்பில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள சு.க.-ஜே.வி.பி. கூட்டணி குறித்துக் கேட்டபோது, இந்தக் கூட்டணி தற்போதைய அரசியல் குழப்பங்களை மேலும் மோசமாக்கி விடுமோ என்று சர்வதேச சமூகம் கவலையடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அகாசி, ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கிடையில் எழுந்துள்ள கருத்து பேதங்களை விரைவில் தீர்த்து, நாட்டின் சமாதானத்தை நிரந்தரமாக்க முயற்சியெடுப்பார்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த, தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பளார் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள்,
புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளை எட்டியும் மக்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்புவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதையும், சமாதான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் அனுசரணை வழங்கியிருந்த போதிலும் சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் அரச இழுபறி காரணமாக எமது மக்கள் சமாதானத்தில் நம்பிக்கையிழந்து வருவதையும் அகாசிக்கு சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் அகாசி குழுவினர் கிளிநொச்சி 155ஆம் கட்டையில் அமைந்திருக்கும் ஐப்பானிய தொழில் பயிற்சி நிறுவனத்தையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சிக்கு வருவதற்கு முன்னதாக, தமிழ் கூட்டமைப்பினர் சம்பந்தன் தலைமையில் அகாசியைச் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தியை இனியும் தள்ளிப்போட முடியாது என சென்றவாரம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குறிப்பிட்டதை அகாசி சுட்டிக்காட்டியதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்திய அகாஷி, நாளை ஜனாதிபதியையும் சந்தித்து உரையாடவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

காவலூர் கவிதன் - ஈழம்
22 .1.2004