புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, February 24, 2004

வன்னிப் பாடசாலை மாணவர்களுக்கு சமாதானம் மூலம் விடிவு கிட்டவில்லை
23-02-2004 - உதயன்

போர் நிறுத்தம் ஊடான சமாதான சூழல் ஏற்பட்ட பின்னர் வன்னியில் போரினால் அழிக்கப்பட்ட பெரும்பாலான கல்விச்சாலைகள் இன்னும் புனரமைப்புச் செய்யப்படவில்லை என கல்வித்துறை சார்ந்தோரால் கவலை தெரிவிக்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டு "கடல் காற்று" படை நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றிய ஸ்ரீலங்காப் படையினர் 1996ஆம் ஆண்டு வரை முல்லைத்தீவு நகரத்தில் நிலை கொண்டு இருந்தனர். இதன்போது 15 வரையான பாடசாலைகள் மக்கள் இடம்பெயர்ந்ததால் இயங்கமுடியாத சூழல் உருவானது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் முல்லைத்தீவு நகரினை "ஓயாத அலைகள் - 01" நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் மீட்டெடுத்தனர். இதன் பின்னர் முல்லைத்தீவு நகரின் மக்கள் மீளக்குடியமர்ந்தனர். அத்துடன், பாடசாலைகள் உட்பட பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. முல்லைத்தீவு நகரில் பெரும் சேதம் அடைந்தநிலையில் காணப்படும் சுமார் 15 பாடசாலைகள் இன்று வரை முழுமையான முறையில் புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் போரின்போது 63 பாடசாலைகள் அழிந்துள்ளன. 1996ஆம் ஆண்டு ஆனையிறவில் இருந்து கிளிநொச்சியினைக் கைப்பற்ற ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட "சத்ஜெய" படை நடவடிக்கை மூலம் பரந்தன், கிளிநொச்சி நகரங்களில் இருந்த 28 வரையிலான பாடசாலைகள் அழிக்கப்பட்டன. 1998ஆம் ஆண்டு "ஓயாத அலை கள்-02" நடவடிக்கை மூலம் கிளிநொச்சி விடுதலைப் புலிகளினால் மீட்டெடுக்கப்பட்ட பின்னர் புத்தெழில் பெற்ற நகரமாக கிளிநொச்சி நகரம் வளர்ந்து வருகின்றபோதும், பாடசாலைகள் அழிந்தநிலையிலும் பூரணமாகப் புனரமைப்புகள் செய்யப்படாத நிலையிலுமே காணப்படுகின்றன.

இந்தநிலை தொடர்பாக கருத்துத்தெரிவித்த கிளிநொச்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. பத்மநாதன், போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் எமது வலயத்தில் கிடைத்த நிதியைக்கொண்டு போரினால் சேதமடைந்த பாடசாலைகளை ஓரளவு திருத்தம் செய்துள்ளோம். இருந்தும் பூரணமான திருத்த வேலைகளுக்கு நிதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். பூநகரிப் பிரதேசத்தில் 1991ஆம் ஆண்டு மண்டைதீவில் இருந்து ஸ்ரீ லங்காப் படையினர் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளினால் 7 பாடசாலைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலைகளும் இதுவரை முழுமையான முறையில் புனரமைப்புச் செய்யப்படவில்லை.

பளைக் கல்விக் கோட்டத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் 15 வரையிலான பாடசாலைகள் முற்றாகச் சேதம் அடைந்துள்ளன. இயக்கச்சி மற்றும் ஆனையிறவுப் பாடசாலைகள் முற்றாக அழிந்த நிலையில் போரின் சாட்சிகளாக இன்றுவரை உள்ளன. யாழ். குடாநாட்டுக்கான பாதை திறப்பு என்ற பெயரில் ஸ்ரீலங்காப் படையினர் வவுனியாவில் ஆரம்பித்த "ஜயசிக்குறு" படை நடவடிக்கை 18 மாதங்களின் பின்பு மாங்குளத்தில் இடைநிறுத்தப்பட்டது. இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 84 பாடசாலைகள் அழிந்தன் மாங்குளம் பிரதேசத்தில் 10 வரையான பாடசாலைகள் அழிந்தன. நெடுங்கேணி கல்விக்கோட்டத்தில் 42 பாடசாலைகளும் ஓமந்தை கல்விக்கோட்டத்தில் 42 பாடசாலைகளும் முற்றாக அழிந்தன. இப்பாடசாலைகள் அனைத்தும் இன்றுவரை முழுமையாகத் திருத்தம் செய்யப்படாததுடன், தமது சொந்த இடத்தில்க்கூட இயங்கமுடியாத நிலையில் இணைப்புப் பாடசாலைகளாக இயங்குகின்றன.

இப்பாடசாலைகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஒக்ஸ் வேல்ட் - தமது கல்வி வலயத்தின் பாடசாலைகளைப் புனரமைக்க 700 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்தார். போரினால் அழிக்கப்பட்ட பாடசாலைகள் முழுமையான முறையில் சமாதான காலத்தில் புனரமைப்புச் செய்யப்படாது இருக்கின்றன. இந்த நிலையில், வன்னியில் ஏனைய மருத்துவ, போக்குவரத்து, விவசாயக் குளங்கள் புனரமைப்புக்கள் எப்படியுள்ளன என்பது பற்றிக் கூறத் தேவையில்லை.

வன்னியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் காரணமாக கிளிநொச்சிக் கல்வி வலயத்தில் 25ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 15 மாணவர்களும், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 20 ஆயிரம் மாணவர்களும் மன்னாரின் மாந்தை, மடு உதவி அரச அதிபர் பிரிவுகளில் 20 ஆயிரம் வரையிலான மாணவர் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் ஊடாகப் பிறந்த சமாதானம் வன்னிப்பாடசாலைகளின் மாணவர்களுக்கு விடிவை இன்னும் தரவில்லை.

நன்றி - உதயன்