தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி முடக்கம் - கே.பி.றெஜி

இது தொடர்பில் அவர் அளித்துள்ள நேர்காணல்:
கேள்வி: சிறிலங்கா மத்திய வங்கி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதற்கு காரணம் என்ன?
பதில்: உண்மையில் எதற்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் எமக்கு அறியத்தரவில்லை. ஆனால் இவ் விவடயம் தொடர்பான செய்திகள் வந்தபின்னர் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் சில அதிகாரிகள் நாம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்கின்றோம் எனவும் இந்த அடிப்படையில்தான் முடக்கத்தினை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
கேள்வி: இதனால் உங்களுக்கு உடனடியாக ஏற்பட்ட பாதிப்பு என்ன?
பதில்: நாங்கள் எமது தாயகத்தில் செய்துவந்த ஆழிப்பேரலை மற்றும் போரினால் பாதிக்கப்படட திட்டங்கள் செய்யமுடியாது தடைப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள், பணியாளர் சம்பளங்கள், சிறுவர் இல்லங்கள் ஆகியவற்றிற்கான கொடுப்பனவுகள் என்பன கொடுக்க முடியாதுள்ளது. இதனால் பாதிக்கப்படப்போவது மக்களும் சிறுவர்களுமே ஆகும்.
கேள்வி: நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கையினை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்?
பதில்: நாங்கள் இது தொடர்பாக அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் தூதரகங்கள், சிறிலங்காவின் உயர் அரச அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எமது சட்ட ஆலோசகர்களை அணுகி இருக்கின்றோம்.
கேள்வி: எவ்வளவு நிதி முடக்கப்பட்டுள்ளது எந்தெந்த திட்டங்களுக்கானவை என கூறமுடியுமா?
பதில்: ஏறக்குறைய 78 மில்லியன் ரூபாய்கள் இதில் 90 வீதமான நிதி சர்வதேச நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற திட்ட நிதியாகும்.
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அனுப்பிய நிதி ஏறக்குறைய 70 இலட்சம் ரூபாய் வரைதான். இது வாகரையில் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளால் அனுப்பபட்டவை ஆகும்.
கேள்வி: எதிர்ரும் காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வதியும் மக்கள் எவ்வாறு தமது உதவிகளைச் செய்யமுடியும், எவ்வாறு நீங்கள் அதனை செய்வீர்கள்?
பதில்: மக்கள் தமது பங்களிப்புக்களை எதுவித தடைகளுமின்றி செய்ய வேண்டும், அந்தந்த புனர்வாழ்வுக்கழகம் ஊடாக செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாம் எமது மக்களுக்கான வேலைத்திட்டத்தினை எப்படி ஆயினும் செய்வோம். நிதியினை அனுப்புவதற்கு உரிய மாற்று ஏற்பாட்டினை செய்து இருக்கின்றோம்.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதாகவும், இராணுவ உபகரணங்கள் ஆழிப்பேரலைக் காலப்பகுதியில் கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: இல்லை, இது தவறானது இப்படியான செய்திகளின் பிறப்பாக்கம் தென்னிலங்கையின் சில இனவிரோத செயற்பாட்டினை ஊக்குவிக்கும் ஊடகங்கள், ஊடகத்துறை சார்ந்த ஒரு சில நபர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்கள் தென்னிலங்கை இனவாத வலைக்குள் சிக்குப்பட்டவர்களாக, பணத்துக்காக தனிநபர் பிரபல்யத்திற்காக செயற்படுபவர்கள். இவர்களின் தோற்றமும் உருவாக்கமும் செயற்பாடுகளும் துரதிர்ஸ்டவசமானது.
ஆழிப்பேரலை காலப்பகுதியில் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்தது உண்மை. அதே நேரம் உலகத்தில் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஏன் சிங்கள, முஸ்லிம் மக்கள்கூட அந்தந்த நாட்டு அரசுகளின் அனுமதியுடன் தாமாக தமது அமைப்புக்களுடாக நிதி சேகரித்து தந்துள்ளார்களள். இவர்களுக்கு புனர்வாழ்வுக் கழகம் எவ்வாறான வேலைகளை செய்தது என்ற விபரங்கள் அடங்கிய அறிக்கையினை அனுப்பியுள்ளோம்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகள் சட்டரீதியாகத்தான் நிதி சேர்த்தார்கள் நாம் அவர்களிடம் சட்டரீதியாக வங்கியூடாக பெற்றிருந்தோம்.
நிதி உதவி செய்தவர்கள் எமது வேலைத்திட்டங்களை நேரடியாக பார்வையிட்டு திருப்தியடைந்து இருக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பது என்பது தவறானது. எமது பணி அதுவல்ல. அவர்கள் இதற்கென வலுவான கட்டமைப்புக்களை வைத்திருக்கின்றனர் என அறிய முடிகின்றது.
எமது செயற்பாடு வெளிப்படையாக வங்கி மூலமாகவே இருக்கின்றது. இது இவ்வாறு இருக்க எதுவித ஆதாரங்களும் இன்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. இனி நாம் இவ்வாறு பொய்க்குற்றச்சாட்டு தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
கேள்வி: ஆழிப்பேரலைக் காலப்பகுதியில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் பொருட்களை கொண்டு வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக உங்கள் கருத்து?
பதில்: இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதனை மேலும் மேலும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
புனர்வாழ்வுக் கழகம் கொழும்புத் துறைமுகமூடாகவே அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொண்டது. இது அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் பாதுகாப்புத்துறை சுங்கத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாக நாம் நம்புகின்றோம்.
இவர்கள், எமக்கு வரும் பொருட்களை விசேடமாக பரிசோதித்து அனுப்புகின்றனர்.
சில பொருட்கள் இராணுவ பாவனைக்கானது என சந்தேகப்பட்டு தடுத்து வைத்திருந்தமை உண்மை. அதாவது படகு உற்பத்திப் பொருட்கள், குடிநீர் குடம், எக்ஸ்-றே இயந்திரம்.
இவை இலங்கையில் எல்லா இடமும் விலை கொடுத்து வாங்கக்கூடிய பொருட்கள் என சிறிலங்கா காவல்துறை ஆய்வின்போது கண்டுபிடித்து 2-3 மாதங்களில் ஒரு பகுதிப் பொருட்களைத் திருப்பி தந்திருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக 50 விழுக்காடு பொருட்கள் பாவிக்கமுடியாது இருந்தன.
தற்போது சில பொருட்கள் இன்னமும் திருப்பித்தரப்படவில்லை. சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் பல அமைச்சுக்கள் இப்பொருட்களை புனர்வாழ்வுக் கழக்த்திற்கு வழங்குமாறு கூறியும் சிறிலங்கா சுங்கத்திணைக்களம் பாதுகாப்புத் திணைக்களம் இன்னமும் தரவில்லை.
இப்பொருட்கள் எங்கு இருக்கின்றன என்ற விபரமும் தெரியாது. அரசாங்க களஞ்சியத்திலா அல்லது தனிப்பட்ட அதிகாரிகளின் களஞ்சியத்திலா என்று கேட்கவும் முடியாது.
கேள்வி: நிதி மற்றும் பொருட்கள் பெறுவதிலும் அதனூடாக செய்யப்படுகின்ற செயற்பாட்டிலும் நீங்கள் உங்கள் வெளிப்படைத்தன்மையை எவ்வாறு பேணுகின்றீர்கள்?
பதில்: வெளிப்படைத்தன்மை, வகை கூறல் என்பன ஓர் நிறுவனத்தின் உண்மையான செயற்பாட்டிற்கு அவசியம் என கருத்திற்கொண்டு அணுகினால் அது வரவேற்கத்தக்கது.
மறுபுறமாக அதனை ஓர் ஆயுதமாகப் பாவித்து மனிதாபிமான செயற்பாடுகளை முடக்கும் அணுகுமுறையாக இருந்தால் அது புறந்தள்ளத்தக்கது.
இரண்டாவதாகக் கூறிய அணுகுமுறையே பலராலும் மேற்கொள்ளப்படுவது எமக்குத் தெரியும். எனினும் நாம் புறந்தள்ளுவது இல்லை. கூடியளவு அனைத்துச் செயற்பாட்டினையும் செய்கின்றோம்.
நிதி பெறுபனவு செலவு விபரங்கள் திட்டங்கள் திட்ட முன்னேற்றங்கள் உள்ளடங்கலான அறிக்கைகள் கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. பெறப்பட்ட பொருட்கள் அனைத்தும் எமது ஆண்டறிக்கையில் உள்ளது.
நிதி உதவி செய்பவர்கள் எமது நிதி அறிக்கையினையும் வேலைத்திட்டங்களையும் நேரடியாகச் சென்று பார்க்கின்றனர், பார்க்கவும் முடியும்.
குறிப்பாக ஆழிப்பேரலைக் காலப்பகுதியில் பூரணமான தகவல்களை உடனுக்குடன் வெளியிட்ட நிறுவனங்களில் நாமும் ஒன்று.
கேள்வி: நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள். ஆனால் சில ஊடகங்கள் ஏன் இதற்கு முரண்பாடான கருத்தை தெரிவிக்கின்றன?
பதில்: அது ஒரு சிலரின் தொழில். ஆனால் எமக்குத் தெரியும் அவர்கள் திட்டமிட்டு எமது செயற்பாட்டினைக் குழப்பி எமக்கு சர்வதேச ரீதியாக இருக்கும் நன்மதிப்பைப் பாதிக்க திட்டமிட்டுச் செயற்படுகின்றார்கள்.
உதாரணமாக எந்தவொரு நபரோ அல்லது ஊடகங்களோ இதுவரை குறிப்பாக எதனையும் கூறவில்லை.
அதாவது விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்திருந்தோம் எனில், எங்கு எப்போது எவ்வளவு செய்திருக்கின்றர்கள் என்றோ? அல்லது வெளிப்படைத்தன்மை இல்லை என்றால் எந்த விடயத்தில் இல்லை என்றோ கூறுவதில்லை.
ஆகவே ஆதாரபூர்வமாக இல்லாமல் செய்தியாக கூறுவதானது உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
கேள்வி: சில வெளிநாட்டு அமைப்புக்களும் புனர்வாழ்வுக் கழகத்தை விடுதலைப் புலிகளின் ஓர் அமைப்பாகவே கூறுகின்றனவே ?
பதில்: ஆம், சிலர் தமக்கு ஏற்றவாறு பாவிக்கின்றனர்.
நகைப்பிற்கு இடமானவைதான். ஆனால் நாம் முடிந்தளவில் அவர்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம்.
நாம் இவ்வாறு கூறுபவர்களை ஏன் இவ்வாறு அழைப்பதற்கு என்ன காரணம் என கேட்டபோது தமது கணிப்பீடுகளை சொன்னார்கள்.
ஓர் அமைப்பின் பிரதிநிதி (கனடா) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொண்டதற்கு ஆதாரம் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் வழிநடத்தலில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செயற்படுவதாகவும் ஆகவே நீங்கள் விடுதலைப் புலிகளின் பிரிவு எனக்கூறினார்.
ஆனால் அவர்களின் நிதி உதவி செய்யப்பட்ட திட்டங்களை விடுதலைப் புலிகள் திறந்துள்ளனர். அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எந்தவொரு நிறுவனம் என்றாலும் விடுதலைப் புலிகளின் ஆலோசனை பெற்றே செய்யவேண்டும். அவர்களின் பிரதிநிதிகள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் இது வழமை.
இன்னொரு நாட்டின் பிரதிநிதி கூறினார் (ஜப்பான்) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் நீங்கள் தலைமை அலுவலகம் வைத்திருக்கின்றீர்கள். ஆகவே விடுதலைப் புலிகளுடன் இணைந்தது எனக்கூறினார்.
இன்னொரு நாட்டின் பிரதி நிதி கூறினார் (ஐரோப்பிய நாடு) நீங்கள் விடுதலைப் புலி ஆதரவாளர்களை வைத்து வேலை செய்கின்றீர்கள். உங்கள் பணியாளர்களில் முன்னாள் போராளிகள் இருக்கின்றனர் எனக்கூறினார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை விட சில சர்வதேச அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கூடுதலாக பணிக்கு முன்னாள் போராளிகளை அமர்த்தியுள்ளனர். இதனை விட ஓர் சர்வதேச நிறுவனம் தனது பயனாளிகளை 100 வீதம் முன்னாள் போராளிகளாக தெரிவு செய்துள்ளது. ஆகவே மேற்கூறப்பட்ட தரவுகள் அர்த்தமற்றவை.
மேற்கூறப்பட்டவர்களின் தரவுகளின் படி பார்க்கப்போனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இயங்கும் அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவை என்றுதான் கூறவேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அமைப்புக்களோ இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே நிலைப்பாட்டைத்தான் நாமும் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எந்தெந்த நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றது?
பதில்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் சில ஊடகங்களில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன், கனடா ஆகிய நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடை செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு உட்படுத்தபட்டதாகவும் செய்திகளைப் பார்த்தோம்.
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஓர் அறக்கட்டளை அமைப்பாக வேலை செய்கின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அமெரிக்க அறக்கட்டளையினால் நான்கு நட்சத்திர தகுதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்காவின் மிகப் பிரபல்யமான இரண்டு அறக்கட்டளை அமைப்புக்கள் எம்முடன் இணைந்து வேலை செய்கின்றன.
அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எந்தவிதமான விசாரணைகளோ இல்லை. தொடர்ச்சியாக அதன் பணி இடம்பெறுகின்றது.
எல்லா நாடுகளிலும் (தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்குகின்ற) அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றது. ஒரு நாட்டில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பிரச்சனை என்றால் அது சம்பந்தப்பட்ட நாடு தன்னுடைய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஏனைய நாட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை அது பாதிக்காது.
கனடாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அறக்கட்டளை அந்தஸ்து இல்லை. ஆனால் அது இயங்குகின்றது.
கேள்வி: அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றதே?
பதில்: இல்லை, அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கப்பட்டது. ஆனால் தடை செய்யப்படவில்லை. அதேநேரம் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
ஊடகங்களில் சிங்கள அரசு இதனை திரித்துக் கூறிவருகின்றது. வேண்டுமென்றே திட்டமிட்டு விசாரணைகள் என்ற பெயரில் புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைத்திட்டங்களை முடக்கி இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முடக்குவதே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் திட்டம். அதன்படி அவர்கள் செய்கின்றார்கள். எனவே புலம்பெயர் நாடுகளில் வதியும் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.
கேள்வி: விடுதலைப் புலிகளை தடைசெய்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது?
பதில்: பாதிப்புக்கள் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏனைய மனிதாபிமான அமைப்புக்கள் போன்றதோர் அமைப்பு. எமது செயற்பாடு அந்த வழியில் தான் செல்கின்றது.
கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய தடையானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டை பாதிக்குமா?
பதில்: முன்பு சொன்ன பதிலே பொருத்தமானது என நினைக்கின்றேன். எனினும் மேலதிகமாக சில கருத்துக்கள்.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையானது விடுதலைப் புலிகளை பாதித்ததோ இல்லையோ தமிழ் பேசும் மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது.
தமிழ் மக்களின் மனதை, அன்றாட வாழ்க்கையினைப் பாதித்து இருக்கின்றது.
போர் அழிவுகளில் இருந்து மீள்வதனை பாதித்து இருக்கின்றது. எனினும் மக்கள் அழுத்தங்களுக்குள் உயிர்வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதனால் இதன் பிரதிபலிப்பு எப்படி இருக்குமென கூறமுடியாது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மக்களின் நெருக்கடிகளை குறைக்கின்றது. அடிப்படைத் தேவைகளைப் பக்கச்சார்பின்றித் தீர்க்க உதவுகின்றது. ஆபத்து நேரங்களில் அவர்களிற்கு உதவுகின்றது. இவை அடிப்படையான மனிதாபிமானப் பணிகள்.
இவற்றை செய்வதற்காக சுதந்திரமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டங்களிற்கு கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பொதுப்படையாக பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு அல்ல.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒரு நாட்டில் தவறு செய்தால் அல்லது குற்றம் சுமத்தப்பட்டால் அந்த நாட்டில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்வதோ அல்லது அதன் செயற்பாட்டினை முடக்குவதோ ஜனநாயக ரீதியான, சட்டரீதியான அணுகுமுறை மூலம் செய்யப்படவேண்டிய ஒன்று. இதனை அந்தந்த நாட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வரவேற்கும். அத்துடன் நான் அறிந்தவரை அவ்வாறான நடவடிக்கைகளை அவர்கள் இதயசுத்தியுடன் எதிர்கொள்வார்கள்.
ஆனால் அரசியல் ரீதியாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அழுத்தம் கொடுத்ததையோ அல்லது பொதுவாக ஊகங்களின் அடிப்படையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மீது அழுத்தத்தினை மேற்கொள்வதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வரவேற்காது. அது ஜனநாயக ரீதியற்ற, சட்ட ரீதியற்ற வெறும் அரசியல் உள்நோக்கம் கொண்டதோர் செயற்பாடாகவே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கருதும்.
விடுதலைப் புலிகளுக்கு அல்லது தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை பாவிப்பதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விரும்பவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பயனாளிகள் போரினால் ஆழிப்பேரலையினால் வறுமையின் பிடியில் சிக்கி வாழும் மக்கள் கண்ணிவெடியினால் தமது அவையவங்களை இழந்தவர்கள். அகதிகள் ஆதரவற்ற சிறுவர்கள் பெண்கள் முதியோர்கள் இவர்களுக்காகவே நாம் பணி செய்கின்றோம்.
கேள்வி: நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு கூறும் செய்தி என்ன?
பதில்: எமது மனிதாபிமான பணியினை பக்கச்சார்பின்றியும் இன வேறுபாடு இன்றியும் ஊழல் மோசடிகள் அற்ற ஓர் சிறந்த விளைவினைத் தரக்கூடியவாறு செய்து நிரூபித்துள்ளோம்.
அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஏற்றுக்கொண்டே எம்முடன் சர்வதேச, உள்ளுர் அமைப்புக்கள் சிறிலங்கா அரசு என்பன வேலைகளைச் செய்து வருகின்றன. கடந்த 20 வருடகாலமாக நாம் எமது நிறுவனத்தினை அந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி செயற்படுகின்றது. எமது அறிவிற்கு எட்டியவரை நாம் எமது நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றோம்
சர்வதேச ரீதியாக மேலும் ஆலோசனைகளைப் பெறவும் உள்வாங்கவும் நாம் தயாராக உள்ளோம்.
சர்வதேச சமூகம் எமக்கு வருடாந்தம் எம்மால் பொறுப்பெடுத்த திட்டங்களுக்கு நிதி உதவி செய்யுமாயின் நாம் தமிழ் மக்களிடம் நிதி உதவி பெறுவதனை நிறுத்தத் தயார். ஏனெனில் அதுவே இன்று பிரச்சனையாக உள்ளது.
எமக்கு நிதி உதவி செய்வதில் நம்பிக்கைக் குறைவு இருப்பின் அதனை தீர்க்க முயற்சி செய்யவேண்டும். இது ஓர் கடினமான விடயம் அல்ல.
நாம் அனைத்து வகையான மனிதாபிமான செயற்பாடுகளுக்கான உள்ளடக்கங்களையும் உள்வாங்கத் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தற்போதைய புனர்வாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும்?
பதில்: புனர்வாழ்வுக்கழகத்தின் மீதான சிறிலங்கா அரசின் மீதான நடவடிக்கையினை ஒவ்வொரு மக்களும் கண்டிக்க வேண்டும். அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைப்புக்கள், அந்தந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டு அமைச்சுக்கள், மனிதநேய அமைப்புக்களுக்கு உங்கள் கண்டனங்களை அனுப்பவேண்டும்.
எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு உதவவில்லை. உதவுபவர்களையும் அண்மைக்காலமாக தடுத்து நிறுத்தி வருகின்றது. இந்த நிலையில் தமிழ்மக்களின் ஒரேயொரு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மக்களுக்கு தற்போதைய சூழலில் தன்னாலான பணிகளைச் செய்து வருகின்றது.
இந்த நிறுவனம் ஊடாகவே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது உறவுகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
ஆகவே இதனையும் முடக்கி தாயகத்தில் உள்ள மக்களை பட்டினி போட்டு அழிப்பதற்கான நடவடிக்கையே சிறிலங்கா அரசு செய்து வருகின்றது.
இதற்கு சர்வதேச நாடுகள் துணைபோகக்கூடாது. இதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இடித்து எடுத்துரைக்க வேண்டும்.
Quelle - Puthinam