புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, December 02, 2003

யாழ். மாவட்டத்தில் 150 மில்லியன் ரூபா செலவில் நீர்வளசூழலியல் பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தல்

பேராசிரியர் ஜெயலத் ஜெயவர்தனவின் தலைமையில் இயங்கும் புனர்வாழ்வளிப்பு, இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்த்துகை அமைச்சு யாழ். மாவட்டத்தில் யாழ். நீர்வள சூழலியல் பாதுகாப்புத்திட்டத்தை செயற்படுத்துகின்றது.

அமைச்சர் நோர்வே அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இத்திட்டத்திற்கென 150 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

யாழ். நீர்வள சூழலியல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பின்வரும் 5 செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வழுக்கியாற்று ஏரியில் உப்பு சேர்வதை தடுத்து நீர்ப்பாசன அமைப்புக்களை புனரமைத்தல், உப்பாறு ஏரியில் உப்பு சேர்வதை தடுத்தலும் தடை வரம்புகளை மீளமைத்தலும், யாழ். நகர எல்லைக்குள் உள்ள குளங்களையும், வாய்க்கால்களையும் புனரமைத்தல், திண்மக்கழிவுகளை உபயோகித்து கூட்டெரு தயாரித்தல், மழை நீர் சேகரித்தல் என்பனவே அவையாகும்.

இத்திட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கள ஆய்வுகள் நிறைவுற்றுள்ளன. கட்டுமான வேலைகளுக்கான வடிவமைப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் திட்ட அலுவலகத்திற்கு இவை தொடர்பாக ஒத்துழைப்பினை வழங்கியது.

அரியாலையிலும் அராலியிலும் அமைந்துள்ள அணைக்கட்டுகள் அவற்றுக்கான தடுப்புக்கதவுகள் புனரமைக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டம் எதிர்நோக்கியுள்ள சூழலியல் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகள் நடத்துவதற்காக ஒரு தனியான ஆய்வுகூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

யாழ் நகரில் உள்ள கழிவுவாய்க்கால்கள் நீர் வழிந்தோடக்கூடிய வகையில் சுத்திகரிக்கப்படுகின்றன. திண்மக்கழிவு அகற்றல், கூட்டெரு ஆலை அமைத்தல், மழைநீர் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

3 வருட கால எல்லைக்குள் செயற்படுத்தப்படும் இத்திட்டம் 2006 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என மேலதிக செயலாளர் க. சண்முகலிங்கம் தெரிவித்தார்.

ஈழத்திலிருந்து தமிழ்மாறன் 01.12.2003
நன்றி: வீரகேசரி

0 Comments:

Post a Comment

<< Home