புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, September 26, 2003

துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழ் மக்களின் நிலையை
நாகரிக உலகமும் ஐ.நா.வும் விளங்கிக்கொள்ள வேண்டும். - வலி வடக்கு பொது அமைப்புக்கள் ஒன்றியம்.

தமிழ்மாறன் - வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2003, 7:50 ஈழம்

துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழ் மக்களின் நிலையை நாகரிக உலகமும் ஐ.நா.வும் விளங்கிக்கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவும் அவர்கள் தமது வாழ்க்கைக்கான தொழிலை ஆரம்பிக்கவும் வழி வகைகளை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கோரும் மகஜர் ஒன்றை வலி வடக்கு பொது அமைப்பு களின் ஒன்றியம் ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு லட்சம் பேரின் கையெழுத்துடன் இந்த மகஜர் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மகஜரில், இடம்பெயர்ந்து துன்பப்படும் மக்களின் நிலை விவரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வடகோடி மூலையிலிருந்து பொத்துவில் தென்கோடி மூலை வரையான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களில் இருந்து இலங்கை அரசு தமிழ் மக்களை வெளியேற்றி இருக்கின்றது. இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் 1980 களிலேயே ஆரம்பித்துவிட்டது. அது தற்போதும் தங்குதடையின்றி தொடர்கின்றது என அறிக்கை குற்றஞ் சாட்டுகின்றது.

மிகவும் தந்திரமான முறையில் தமிழரின் நிலத்தை அபகரிக்கும் செயல்கள் 1930 களிலேயே ஆரம்பித்து விட்டன. தற்போது நடைபெறும் சமாதான முயற்சிகள் தமிழர் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக இது மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை உயர் பாதுகாப்பு வலயங்களினால் நேரடியாக ஏற்பட்ட விளைவாகும்.

ஒரு வருடத்திற்கும் மேலாக யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தாலும் இலங்கை அரசின் ஆயுதப்படைகள் தமிழர் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்துள்ளன. இந்த உயர் பாதுகாப்பு வலயங்களினால் தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வலிகாமம் வடக்குப் பிரிவை இதற்கு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

வலிகாமம் வடக்கில் மொத்தம் 45 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 31 கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடக்கப்பட்டுள்ளன. இதனால், சொந்தக் கிராமத்திலிருந்து 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

தமிழர் பகுதிகளைச் சூழவுள்ள முழுக்கரையோரப் பிரதேசமும் உயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்படுகின்றது. குறித்த கடற்பகுதிகளில் குறித்த நேரங்களில் மட்டுமே கடலுக்குச்செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் இயல்பு நிலையை மீளமைத்தல் என்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மனித உரிமை பற்றி இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் பெருமையாகப் பேசப்படுகின்றபோதும் நடைமுறையில் அது செயற்படுத்தப்படுவதேயில்லை. என கோபி அனானுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கை குறை கூறியுள்ளது.

ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமான அசைவுகளை மேற்கொள்ளவும் அவரது வசிப்பிடத்தை இலங்கையினுள் எந்த இடத்தினுள்ளும் விரும்பியவாறு தெரிவு செய்யவும் உரிமையளிக்கப்பட்டுள்ளது என இலங்கைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபோதும், பல நூற்றாண்டுகளாகச் சொந்தமாக வைத்திருக்கும் தங்களது தனிப்பட்ட நிலங்களில், தங்களது சொந்தச் செலவிலும் உழைப்பிலும் கட்டிய வீடுகளில் வசிக்கும் உரிமை தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என அறிக்கை சாடியுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தால் மக்கள் வாழ்விடங்களை இழந்தமை, வாழ்க்கைக்கான தொழில்கள் அற்றுப் போனமை வணக்கத்துக்குரிய இடங்களுக்குச் செல்ல முடியாமற் போனமை, கல்வியில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு, சுகாதாரக் குறைபாடுகள் ஊட்டச்சத்தின்மையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்றன பற்றி அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய நடவடிக்கைகள் யாவும் மனித உரிமைகளையும் தனி மனித சுதந்திரத்தையும் வெளிப்படையாகவே மீறுகின்றன. இந்த வேதனைகளைத் தொடர்ந்தும் தாங்கிக் கொள்ள முடியாது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஏராளமான தமிழ்மக்களின் நிலையை நாகரிக உலகமும் ஐ.நாவும் விளங் கிக் கொள்ளவேண்டும். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமரவும், அவர்களது வாழ்க்கைக்கான தொழிலை ஆரம்பிக்கவும் வகை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இப்படி அறிக்கையின் இறுதியில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: இலண்டன் ஐ.பி.சி தமிழ்
நன்றி - புதினம்.கொம்

0 Comments:

Post a Comment

<< Home