புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, September 19, 2003

பல பில்லியன் டொலர் புனரமைப்புப் பணிகள் தெற்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
காவலூர் கவிதன் - வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2003, 2:10 ஈழம்

3.1 பில்லியன் செலவில் 5 வருடத்திற்குள் கட்டுநாயக்கா விமானத் தளத்தைப் புதிப்பது உட்பட பல பில்லியன் டொலர் புனரமைப்புப் பணிகள் தெற்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலப் போரில் அழிவுக்குள்ளான வடக்கிலும் கிழக்கிலும் எதுவித பாரிய புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ள ஆரம்பிக்கப்படாத நிலையில், தெற்கில் விமானத் தளங்கள், பெருந்தெருக்கள், வீதிகள், சந்தைகள், விகாரைகள், பள்ளிவாசல்கள், பாராளுமன்றக் கட்டிடங்கள், அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள் என்று ஏராளமானவற்றின் பாரிய புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழர் தரப்பு இன்னும் கண்டுகொள்ளாது இருப்பதை சில அரசியல் அவதானிகள் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானத் தளத்தின் புனருத்தாரணப் பணிகளைத் தொடர்ந்து, விரைவில் கொழும்பு-கண்டிக்கிடையிலான பெருந்தெருவை நிர்மாணிக்கும் பணிகளுக்கான திட்டமும் கைச்சாத்தாகவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றாகப் புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. தெற்கிலுள்ள நகரங்கள், கிராமங்களின் வீதிகள் பலவும் பழுதடைந்த நிலையில், பல வருடங்கள் புனரமைப்பு மேற்கொள்ளப்படாமையால், விரைவில் இப்பணிகளும் ஆரம்பிக்கப் படவுள்ளன.

நாட்டில் அமைந்துள்ள அத்தனை பௌத்த விகாரைகளையும் ஆராய்ந்து, அவசியமான புனரமைப்பை மேற்கொள்வதென்று அரசு அறிவித்தது தெரிந்ததே. பல பள்ளிவாசல்களைத் திருத்தியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆரச திணைக்களக் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் நீண்ட காலம் இருப்பதனால், அவற்றைப் புதுப்பிக்கும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. இவற்றுடன், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, இராணுவ மற்றும் ஏனைய படையினரின் சம்பள உயர்வு, இராணுவத் தளங்கள் புதுப்பிப்பு, கப்பற்படைத் தளங்கள் புதுப்பிப்பு, இராணுவ தளபாடங்கள் புதுப்பிப்பு, மேலதிக இராணுவ ஆட்சேர்ப்பு என்று அரசாங்கள் தமது பக்கத்தில் அனைத்து விடயங்களையும் வேகமாகவும் விவேகமாகவும் மேற்கொள்ளும் அதே வேளையில், தமிழர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு, தங்கள் எதிர்காலத்திற்குத் தாங்களே கொள்ளிவைத்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

nantri - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home