புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, December 27, 2004

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அவசர வேண்டுகோள்!

26.12.2004

நில நடுக்கத்தினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு உடனடியாக உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு கரையோரப்பகுதிகள் பெரும் கடல் கொந்தளிப்பிற்குள்ளும், வெள்ள அனர்த்தங்களிற்கும் உட்பட்டது.
அம்பாறை, மட்டக்களப்பு, மூதூர், திருக்கோணமலை, வடமாராட்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்களும், நகரங்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சில கரையோரப் பகுதிகளினுள் மூன்று கிலோமீற்றர் வரை உள்நுழைந்த கடல்நீர் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுமார் 1,000 பொதுமக்கள் இதுவரை காணமல் போயுள்ளனர் என்ற தகவல் அப்பகுதி புனர்வாழ்வுக் கழக தொண்டர்களினால் தரப்பட்டுள்ளது. இவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகளவில் அடங்கியுள்ளனர்.

தற்போது, இப்பகுதிகளில் துரித மீட்புப் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் புலிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் மக்கள் உயர்வான உட்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலைப் பகுதிகளில் தற்போது வெள்ளம் முற்றாக நீங்கிவிட்டது. இங்குள்ள கரையோரக் கிராம மக்கள் தற்போது ஐமாலியா, சென்சேவியர் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை வெள்ளத்தால் கொல்லப்பட்ட 6 உடல்கள் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மூதூர் பகுதியில் இதுவரை 152 சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்பகுதிகளில் எமது தொண்டர்களும், பொதுமக்களும் மீட்பு மற்றும் அவசர உதவிவழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாராட்சி பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கலில் கொல்லப்பட்ட 52 உடல்கள் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் 300 காயமடைந்த பொதுமக்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக உயர்வான உள்கிராமப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் 250ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் இவ்வெள்ள அனர்த்தங்கள் தொடர்பான அச்சம் இன்னமும் ஓயாத நிலையில் மக்கள் தத்தமது கிராமங்களுக்கு உடனடியாக செல்லமுடியாத சூழல் நிலவுகின்றது.

தற்போது தற்காலிகமாக வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ள மக்களிற்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணி துரிதமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பெருமளவு உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்துலக சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றது.

அனைத்துலக ரீதியாக ரிரிஎன் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஊடாக இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் நம்பிக்கை ஒளி நிதித்திட்டத்தின் முழு வளங்களும் தற்போது ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குவது என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முடிவு செய்துள்ளது.

பல்லாயிரம் மக்களின் அவசர தேவை கருதி உடனடியாக செயற்பட்டுää நிதிப்பங்களிப்புக்களை வழங்குமாறு புகலிடத்தமிழர்கள்ää தமிழ் வணிகர்கள்ää பொதுநிறுவனங்கள்ää ஆலயங்கள் ஆகியோரிடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றது.


தமிழீழ பிரதேசங்களில் பாரிய உயிரிழப்பு

26.12.2004

வடமராட்சி கிழக்கில் செம்பியன்பற்று முதல் சுண்டிக்குளம் வரை பிரதேசத்தில் 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. முல்லைத்தீவு செம்மலையில் இதுவரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் கடல்நீர் இதுவரை முழுமையாக வடியாத காரணத்தினால் அங்கு உதவிகள் முழுமையாக சென்றடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.



ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு: தமிழர் தாயக பாதிப்புக்களின் முழு விவரம்!

26.12.2004

இலங்கையின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீர் கிராமங்களுக்குள் புகுந்ததன் காரணமாகவும் தமிழர் தாயகத்தின் கரையோர பிரதேசங்களில் சுமார் 800க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவிலும் பங்களாதேசிலும் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாகவே இந்த கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடலோர கரையோர கிராமங்கள் கடல் நீரினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளதோடு அக் கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியுள்ளன.

வீடுகளிலிருந்த உடமைகள், வாகனங்கள் உட்பட பொருட்கள் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது இப்பிரதேசம் எங்கும் கடல் நீர் உட்புகுந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து மேட்டு நிலங்களிலுள்ள பொது இடங்களிலும் மாடிக்கட்டடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தற்போது அநேகமான பிரதேசங்களில் மின்சாரமும், தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பிய தகவலின் படி மாதகல், காரைநகர், பருத்தித்துறை, சம்மாங்கோட்டை, வடமராட்சி கிழக்கு உட்பட கரையோரக் கிராமங்கள் கடல் நீரினால் அடித்துச், செல்லப் பட்டுள்ளன.

பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும் மந்திகை வைத்தியசாலையில் 12 சடலங்கள் வரை இதுவரை மீட்கப்பட்டு ஒப்படைக்க்பட்டுள்ளது.

இன்று காரைநகர் சிவன் கோவில் தீர்த்தம் என்பதால் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர யாழ் குடாநாட்டில் பரவலாக நூற்றிற்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

சிறிலங்கா இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் கரையோரங்களில் அமைந்திருப்பதால் இராணுவத்தினருக்கும் உயிரிழப்பு காயங்கள் உட்பட பாதிப்புகள் எற்பட்டுள்ளதாக தெரியருகின்றது.

எமது மட்டக்களப்பு செய்தியாளரின் தகவலின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதே நிலை அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்ட கரையோரக் கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் 150 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நிந்தவ10ர் பிரதேசத்திலுள்ள குர் - ஆன் மத்ரசா ஒன்றில் தங்கியிருந்த 39 சிறுவர்கள் உட்பட 40 பேர் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ங்களைப் பொறுத்த வரை சகல கரையோக் கிராமங்களிலும் உயிரிழப்புகள் எற்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக மூதூர் பிரதேசத்திலுள்ள கிண்ணியா, மூதூர் உட்பட 6 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இக் கிராமங்களில் 150 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

வன்னியில் முல்லைத்தீவு நகர் கடல் நீரில் மூழ்கியுள்ளது.

இப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் முள்ளியவளை மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

உயிரிழப்புகளும் இடம் பெற்றுள்ள போதிலும் மேலதிக விபரங்கள் இது வரை கிடைக்கவில்லை.


தமிழீழ பகுதிகளில் கடல் கொந்தளிப்பின் நிலைமை என்ன?


26.12.2004

தமிழர் தாயகத்தில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தற்போது ஈடுபட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள கரையோரப் பிரதேசங்களிலுள்ள குடியிருப்பாளர்களை மீட்பு பணிகளிலும்ää இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான புனர்வாழ்வு பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

வன்னி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதனால் இரத்த தானம் செய்ய முன் வருமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரையோர கிராம மக்கள் வாவிக்கு அப்பாலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

தங்களுடைய கட்டுப்பாட்டு பகுதியின் நுழைவாயிலிலிருந்து நலன்புரி நிலையங்கள் வரை விடுதலைப் புலிகளினால் விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வைத்தியம் மற்றும் உணவு வசதிகள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அனுசரனையுடன் இடம்பெற்று வருகின்றன.

சாவகச்;சேரி மருத்துவமனைக்கு 6 குழந்தைகளின் சடலங்களும்ää கிளிநொச்;சி மருத்துவமனைக்கு 40 சடலங்களும் வந்து சேர்ந்ததாக அறியப்படுகின்றது.

வடமராட்சி கிழக்கில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நிரம்பிவழிகின்றது.

அங்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த மக்கள் பாடசாலைகளிலும் வைத்து சிகிச்சையளிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவினரும் தமிழீழ சுகாதார சேவைப்பரிவினரும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

சிறீலங்காவில் கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக 3 ஹெலிகொப்டர்களும் கடற்படை வள்ளங்களும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்புää திருக்கோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டள்ளன.

கடல் கொந்தளிப்பு காரணமாக கரையோரப் பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

8 இராணுவ வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவலொன்று கூறுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும்ää அவசர பணிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

இதேவேளை கடல் கொந்தளிப்பு காரணமாக தென்னிலங்கையில் களுத்துறை, கொழும்பு, மாத்தறை, அம்பாந்தோட்டை புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம் மாவட்டங்களிலும் உயிரிழப்புகளும், உடமை அழிவுகளும் எற்பட்டுள்ளன.
தற்போது கடல் கொந்தளிப்பு பரவலாக ஓய்ந்திந்தாலும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.




சுனாமி என்றழைக்கப்படும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால் சிறிலங்காவில் களேபரம்

26.12.2004

சுனாமி என்ற பெயரீட்டில் அழைக்கப்பட்ட 8.5 வேகமுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால், சிறிலங்காவின் கரையோரக் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக அம்பாறை மற்றும் திருக்கோணமலை மக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பல தமிழ் கிராமங்களும், இன்னும் பல சிங்களக் கிராமங்களும் இந்தக் கடற்கொந்தளிப்பினால் பலத்த சேதமடைந்துள்ளதுடன், ஏராளமான பொதுமக்கள் இறந்தும் படுகாயமடைந்துமுள்ளதாக எமது செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்னர்.

இதுவரை 200 பேர் வரை இறந்திருக்கலாமென்றும், குறைந்தது 1,000 பேராவது படுகாயமடைந்துள்ளதுடன், 20,000 குடும்பங்களாவது நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அவசர உதவிகள், வைத்தியத் தேவைகளை வழங்குவதில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கில் பாதிப்படைந்த கிராமங்களில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களில் பாதிப்படைந்த பொதுமக்களின் வைத்திய மற்றும் அவசரத் தேவைகளைக் கவனிப்பதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அரச தரப்பிலிருந்து இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.




கடல் கொந்தளிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

26.12.2004

தமிழ் மற்றும் சிங்களப் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வேகப் புயற்காற்று மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.

160ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன், கடுமையான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கிராமங்கள் போன்று, ஏராளமான சிங்களக் கிராமங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும், மிக அதிகமான வறுமைக் கோட்டிற்குக் கீழே துன்புறும் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் பலரும் பலத்த பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் அரசியல் பிரமுகர்கள் கருத்துக் கூறுவதில் குழப்பமடைந்துள்ளதாகவும், அவசர சிகிச்சைப்பிரிவை உபயோகிப்பதில் சீரற்ற நிலை நிலவுவதாகவும் தெரியவருகின்றது.




கடல் கொந்தளிப்பால் ஏராளமான கிராமங்கள் கடும் பாதிப்பு@ மூதூரில் கடும் பாதிப்பு!

26.12.2004

திடீரென இடம்பெற்ற 8.5 மக்னிரியூட் வேகப் புயற்காற்று மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் ஏராளமான தமிழ்க் கிராமங்களும் தமிழர் தாயகப் பகுதிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

குறிப்பாக கிழக்கிலங்கையின் மூதூர் கிராமத்தில் 150 பேராவது இறந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.

இது தவிர, வடமராட்சி மந்திகை பகுதியில் குறைந்தது 10 சடலங்கள் வந்துள்ளதாகவும், வடக்கின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இக் கடல் கொந்தளிப்பில் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கட்டடங்கள் சேதமடைந்ததில், கட்டட இடிபாடுகளில் சிக்குண்டு ஏராளமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் இறந்துமுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

கட்டடங்கள் சேதமடைந்ததில் பெருமளவிலான இராணுவத்தினரும் காயமடைந்ததாகவும் இந்த இராணுவத்தினர் மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பாலாலிக்கு நகர்த்தப்படுவதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.




கிழக்கில் கடல் கொந்தளிப்பால் நிலைமை மோசம்: ஏராளமானோர் உயிரிழப்பு

26.12.2004

இலங்கையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட கரையோக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் முதல் திருக்கோணமலை வரையிலான கரையோரக் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி எங்கும் சோக மயமாகக் காட்சியளிப்பதாக எமது செய்தியாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருக்கோணமலை, மூதூர், கல்லாறு, மருதமுனை, கல்முனை,நிந்தவ10ர்ää சாய்ந்தமருதுää களுவாஞ்சிக்குடி, திருக்கோவில்,அக்கரைப்பற்று, கிண்னியா உட்பட 25ற்கும் மேற்பட்ட பிரதேசங்கள், கடல் கொந்தளிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாவி மற்றும் ஆறுகளை அண்டியுள்ள கரையோக் கிராமங்களே இவ்வாறு பெரிதும் பாதிப்புக்களாகியுள்ளன.

எமது செய்தியாளர்களின் தகவலின் படி நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளார்கள். மேலும் நூற்றுக் கணக்கானோர் பற்றிய தகவல்கள் இல்லை. வீடுகள், வாகனங்கள், உடமைகள் கடல் பெருக்கெடுப்பால் செல்லப்பட்டுள்ளது.

இன்று காலை 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக மக்கள் தமது இருப்பிடங்களில் கடல் நீர் வந்ததையடுத்து அகப்பட்ட பொருட்களுடன் அல்லோலகல்லோலப்பட்டு வெளியேறி மேட்டு நிலங்களிலுள்ள பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

வாவியிலும் கடலிலும் பல சடலங்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளின் சடலங்களே அதிகம் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

3 அடி முதல் 12 அடி உயரம் வரை வித்தியாசமான நிலையில் கடல் கெந்தளிப்பு காணப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் ஏனைய பகுதிகளான வத்தளை, தங்காலை, காலி, மாத்தறை, புத்தளம், களுத்துறை போன்ற இடங்களிலும் கடல் கொந்தளிப்புக் காரணமக ஏராளமான உயிரிழப்புகள், உடமை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

0 Comments:

Post a Comment

<< Home