புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, December 21, 2004

கிழக்கு வெள்ள நிலை

மட்டக்களப்பு றூகம் குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!
17.12.2004

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பிரதான நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழியத் தொடங்கியதையடுத்து மட்டக்களப்பு றூகம் குளம் உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வெள்ளம் தொடர்பான தற்போதைய நிலவரம் வருமாறு:
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மீணவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள். இதன் காரணமாக இம் மாவட்டத்தில் 27 ஆயிரம் மீனவ குடும்பங்கள் அரசாங்க நிவாரணம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

நேற்றும் இன்றும் கடும் மழை பெய்துள்ளதால் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சம் பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 5000 என மாவட்ட அரசாங்க அதிபர் வே.சண்முகம் இன்று மாலை தெரிவித்தார்.

இக் குடும்பங்கள் அனைத்திற்கும் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வீதிகளில் வெள்ளம் பாயும் இடங்களில் தோணிகள் மூலம் மக்களைப் பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணிகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிவாரணப் பணிகளுக்காக ரூபா 150 லட்சம் தேவைப்படுகின்றது. ஆனால் இது வரை ரூபா 40 லட்சம் மாத்திரமே சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

கிராமசேவை அலுவலகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய சகல அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

றூகம், உன்னிச்சை, நவகிரி மற்றும் வாகனேரி ஆகிய பிரதான நீர்ப்பாசனக் குளங்கள் 4ம் தற்போது நிரம்பி வழிவதால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனையடுத்து அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளார்கள்.

15 அடி 8 அங்குலம் உயரமுடைய றூகம் குளத்தின் நீர் மட்டம் மேலும் 3 அடி 4 அங்குலத்திற்கும் மேலாகப் பாய்வதால் அது எந் நேரத்திலும் உடைப்பெடுக்கக் கூடும் என மாகாண நீரப்பாசனப் பிரதிப் பணிப்பாளர் கே.பாஸ்கரதாஸ் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப் பகுதியிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறும் அவர் கேட்டுள்ளார்.

போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உள்ளுர் சந்தையில் அதிகரித்துள்ளது. சில பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நிலவரம் தொடர்பாக எமது கல்முனை பிரதேச செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள தகவல்கள் வருமாறு:
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் நாவிதன் வெளிப் பிரதேசமாகும். இப் பிரதேசத்திலுள்ள 25 ஆயிரம் மக்கள் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

385 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இப் பிரதேசத்திற்கும் கல்முனை பிரதேசத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தும் கிட்டங்கி தாம்போதியில் 5 அடி தண்ணீர் பாய்வதால் தோணி மூலம் மக்கள் போக்குவரத்து செய்கின்றார்கள்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.ஹேரத் அபயவீர வெளியிட்டுள்ள தகவலின் படி:
17 மில்லியன் ரூபா நிவாரண உதவிகளுக்காகத் தேவைப்படுகின்ற போதிலும் 3 மில்லியன் ரூபாவே சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்திலும் 16 ஆயிரம் மீனவ குடும்பங்கள் தொழில் இழந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை நிலவரம் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள தகவலின் படி :
திருகோணமலை மாவட்ட எல்லைக் கிராமமான வெருகல் பகுதியிலிருந்தும் 64 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்து கதிரவெளி அ.த.க. பாடசாலையில்; தஞ்சம் பெற்றுள்ளார்கள்.

1969 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சம் பெற்றுள்ளன.

நிவாரணப் பணிகளுக்காக ரூபா 30 லட்சம் தேவை என மதிப்பிடப்பட்ட போதிலும் 5 லட்சம் ரூபா மட்டுமே சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்கா 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சமூக சேவைகள் அமைச்சிற்கு இன்று வழங்கியுள்ளது.

Quelle - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home